Thursday, February 4, 2010

பார்வை

கூட்டத்தில் கண்ணால்
பேசிக் கொண்டதால்
வார்த்தைகளின்
எதிரியல்ல நான்

வர மறுக்கின்றன
வார்த்தைகள்
உன் கண்கள் என்னைக்
கைது செய்ததால்

பேசினால், வார்த்தைகளின் வேகத்தில்
அர்த்தங்கள் தவறாகும் இங்கே
தாளம் தவறிய, சுருதி விலகிய
சங்கீதம் போல் நா பிறளும்

Wednesday, January 27, 2010

இயற்கை

அடிமையாகிறேன் உனக்கு
நீ அழகாய் இருப்பதால்
கடவுள் உன்னை மட்டும்
அழகைப் படித்ததன்
நோக்கம் தான் என்னவோ?

செயற்கையே அறியாத உன்னை
இயற்கை என்கிறது மனிதம்

உன்னை அழிக்க வந்த
மனிதனை நம்பும் நீ
ஏமாளியா?
கொலையாளியையும்
அரவணைக்கும் கருணையளியா?

அழகு படுத்த வேண்டிய
உன்னை அழிப்பதன் நோக்கம்

உன் புற அழகில்
திளைக்கும் மனிதன்
உன் அக அழகால்
உயிர் வாழ்வதால்
ஈனமற்றவனாகிரானோ?

பதில் சொல்லாமலே
உறையும் உன்னை காப்போம்

Sunday, January 24, 2010

கடவுளுடன் ஒரு உரையாடல்

கற்பனைகளும் யதார்த்தங்களும் கூடிய பதிவு இது. கடவுளுடன் சம்பந்தமாக எழுதலாமே என்று ஒரு எண்ணம் தோன்றியது. இப்போது தான் நேரம் கிடைத்ததால், எழுதலாமே என்று. கடவுள் ஒருவர் கண்ணெதிரே தோன்றும் சந்தர்ப்பங்களையும், அந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வகையில் எப்படிப் பேசுவார் என்பதையுமே இப்பதிவு கொண்டு வருகிறது.


நாத்திகன் ஒருவன் கடவுளை சம்பந்த சம்பந்தமில்லாமல் ஏசிக் கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாத கடவுள், அவன் முன்னே தோன்றினார்.
கடவுள் - என்ன உரிமை இருப்பதால் நீ என்னை ஏசுகிறாய்?
நாத்திகன் - எந்த உரிமையும் இல்லாததாலே எசுகிறேன், நீ யார் கேட்பதற்கு? உன்னை நம்பிற ஆத்திகனே உன்னை ஏசுகிறான், நான் ஏசினால் என்ன?
கடவுள் - அவன் என்னை நம்புபவன், அவனுக்கு என் மேல் உரிமை இருக்கிறது. என்மேல் உரிமை இருக்கும் என்னை நம்பும் யாருக்கும் என்னைப் பற்றிப் பேசும் உரிமை உண்டு. என்னைப் பற்றிப் பேசும் அவனுக்கு என்னை ஏசும் உரிமை இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
எதுவுமே சொல்ல முடியாமல் திக்கு முக்காடியவனை, அரவணைத்த கடவுள் என்னை நம்புவதும் நம்பாததும் உன் விருப்பம், ஆனால் ஒருவரைப் பற்றிப் பேசும் அல்லது ஏசும் முன் சிந்தனை செய் என்றார்.
*****************************************************************************************

ஆத்திகன் ஒருவன் எவ்வளவு தான் கடவுளை நம்பி இருந்தும் என் என் வாழ்க்கை இப்படிப் போகிறது என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
என்னை இப்படி நம்பும் இவனா இப்படிப் பேசுகிறான் என்ற கவலையுடன் அவனை நெருங்கிய கடவுள் அரவணைக்க முற்படுகிறார்.
ஆத்திகன் - இப்ப மாத்திரம் வந்து என்ன பயன், எல்லாமே போச்சு...
கடவுள் - மனிதன் வழிநடத்தப் படுவதற்காகவே மனிதனால் உருவாக்கப் பட்டவன் நான். என்னை நம்பி நீ இருந்தது மட்டுமல்லாது, உன் மேல் நீ நம்பிக்கை வைத்து, கடினமாக உழைக்காமல் விடும் பட்சத்தில் என்னால் மட்டுமல்ல யாராலும் உன் பிரச்சனையிலிருந்து உன்னைக் காப்பாற்ற முடியாது. கடவுள் கடவுள் என்று தன அன்றாட நடவடிக்கைகளை மறந்த இவனுக்கு அப்போது தான் ஞானம் பிறந்தது.
தன் வாழ்க்கையை அவனே வழி நடத்த வேண்டும் என்பதை அறிந்த அவன், தன் வெற்றிப் பாத்தியை நோக்கி நடைபோடுகிறான்.
****************************************************************************************

தங்கள் காதலை இதுவரை காலமும் மறைத்து வைத்த காதலர்கள், எப்படியாவது தங்கள் காதலை சேர்த்து வைக்கும் படி கடவுளிடம் கேட்ட போது.
கடவுள் - நீங்கள் காதலிக்கும் ஆரம்பத்தில் என்னிடம் கேட்கவில்லையே (காதல் சொல்லிக் கொள்ளாமல் வருவது தானே என்று வாதித்தால், அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை), என்னையாவது விடுங்கள் உங்களை வளர்த்து ஆளாக்கிய உங்கள் பெற்றோரிடம் சொன்னீர்களா?
காதலர்கள் - கடவுளே, உதவி கேட்கும் நேரத்தில் இப்படிக் காலைவாரி விடுவது நியாயமா?
கடவுள் - அப்படி இல்லைக் குழந்தாய், காரணம் இல்லாமல் வருவது தான் காதல், ஆனால் வாழ்க்கையின் நியதிகள் பல. எல்லா விருப்பங்களையுமே பூர்த்தி செய்யும் உங்கள் பெற்றோருக்கு செய்யும் நன்றிக் கடன நீங்கள் செய்யும் நன்றிக் கடன் இது தானா? [என்ன பழைய டயலாக் மாதிரி இருக்கா, அட்ஜஸ்ட் (adjust) பண்ணுங்க.. ]
காதலர்கள் - எங்கள் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் அவர்கள் ஏன் இதை மட்டும் மறுக்கிறார்கள்?
கடவுள் - தவறான பொருள்களை வாங்கிய பின்னோ பெற்ற பின்னோ தவிர்த்து விடலாம் அல்லது வேறு பொருளை வங்கி விடலாம், ஆனால் வாழ்க்கை ஒரு முறை தவறினால் திருப்பி வாங்கப் பட முடியாதது.
காதலர்கள் - நாங்கள் எங்களை நன்கே புரிந்து கொண்டு தானே காதலிக்கிறோம், அதனால் எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் வரத்து.
கடவுள் - இப்படித் தான் பல காதலர்கள் சொல்லி, கடைசியில் பெற்றோரிடமே பிச்சை கேட்கும் நிலைமையில் இருக்கிறார்கள்.
காதலர்களுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, இளங்காதல் முடிவெடுக்க மறுத்ததை உணர்ந்த கடவுள் தானாகவே விலகிக் கொண்டார்.

பி.கு - கடவுள் சம்பந்தமா போடுவமா? என்று யோசித்தேன், சும்மா ஒரு மொக்கை போடலாமே என்று தான் போட்டேன். வாசித்ததுக்கு அப்புறமா இங்க வந்திடாதேங்க, எதுக்கா? அடிக்கத் தான்..

Monday, January 18, 2010

மரமா? உன்னை விட உயர்ந்ததடா அது.

வைரமுத்துவின் ஒரு கவிதை கேட்ட பின் மரத்தைப் பற்றி என்ன எழுதலாம் என்று யோசித்தே, வைரமுத்துவுக்கும் என்றைக்கும் மனிதனை விட மரங்களை விருப்பமோ என்னவோ, மரத்துக்கு சார்பாக எழுதலாம் என்று நினைத்தேன். எல்லா பாகங்களுமே மனிதனை விட சிறந்ததாகவே இருக்கிறது மரத்துக்கு என்பதைப் புரிந்தும் கொண்டேன்.



வேர்
தன்னை எல்லோரும்
பார்க்கவேண்டும் என்று
மனிதன் போல்
வேர் நினைத்தால்
சோலைகளும்
பாலைவனங்களாக

கிளை
மனிதன் போல்
தங்களுக்கு
முந்தியடித்துக் கொண்டாலும்
பிறருக்கு நிழல் தருவதற்கே
மனிதன் போல் தன்னை உயர்த்தவல்லவே

இலை
மனிதன் போலல்லாது
இளமையிலும் முதுமையிலும்
அழகாக இருக்கும் இலை
இறக்கும் போதும்
மரண ஓலம் இல்லாமல்

காய்
கனியிருக்கும் மரங்களில்
தனக்கு மதிப்பில்லை
என்ற போதும்
தன்னை அழிக்காது
உருமாறும் உதவியாளி
(அடிச்சு சாப்பிடும் மாங்காய் தான் சுவை மாம்பழத்தை விட என்று சொன்னால், அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை)

கனி
அரியது
மனிதனின் நற்குணங்கள் போல்
இனியது
அறுசுவைகளில் ஒன்றாக
தப்பினால் குப்பையில்
வேண்டாப்பொருளாக

Thursday, January 14, 2010

தைத்திருநாள் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

உழவர்களுக்கான பண்டிகை என்று சொன்னாலும், எல்லோராலும் கொண்டாடப் படவேண்டிய பண்டிகை இது. சூரியனுக்கு உழவர்கள் மட்டுமல்ல எல்லோருமே நன்றி சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு பண்டிகை தான் இந்த தைப் பொங்கல்.
தமிழர்களுக்கு தை மாதத்தின் முதல் நாள், தவறுகளைத் திருத்துவதாக பலர் சொல்லிக் கொள்ளும் நாட்களில் இதுவும் ஒன்று.



நமக்கெல்லாம் திருநாள்
அது உழவனுக்கு மட்டுமல்ல
பெற்ற உதவி நேரடியானது
இல்லை என்கிறாயா?
நேரடியை விட
மறைமுகத்தை விரும்பும்
மனிதா
இந்த மறைமுக உதவிக்கும்
நன்றி சொல்

எரிக்கிறாய் என்றவனும்
போற்றுகிறான் உன்னை இன்று
எதிரியும் நண்பனாகலாம்
என்று சொல்லாமல் சொல்லும் திருநாள்


எவ்வளவு தான்
தொலைவில் இருந்தாலும்
அருகிலேயே இருக்கிறேன்
என்றுணர்த்தும்
சூரியனுக்கு
இன்று திருநாளாம்
குளிர் காலத்தில்
பலர் எதிர்பார்க்கும்
ஒருவன்
கோடைகாலம் வந்ததும்
ஏன் வெறுக்கப்படுகிறான்?

வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா

Wednesday, January 13, 2010

காரணம்

காரணமில்லாமல்
காரியமோ மனிதனோ வாழ்க்கையோ
யாவுமே பொய்யடி என்றாள் அன்று
அதே காரணம் காரணமின்றி
இன்று

ஏன் எதற்கு எப்படி
என்று
கேள்வி கேட்டு வளர்ந்தும்
காரணம் ஏதும் தெரியாமல்
இன்று

எப்படி என்றாலும்
எதற்காக என்றாலும்
ஏன் என்றாலும்
மௌனமே பதில்
இன்று

எதிர்காலம் பற்றி
முன்னே திட்டமிடுபவள்
எதிர்காலமா?
அது என்ன என்கிறாள்
இன்று

இதற்கெல்லாம் காரணம் கேட்டால்
என்னிடமே காரணமா
என்ற வெறித்துக் கிடக்கும்
சிரிப்பு தான் மீதமாக
இன்று

காரணமில்லாத பலர்
காரணமில்லாத விடயங்கள்
காரணமில்லாத காரணிகள்
காரணமில்லாத சந்தர்ப்பங்கள்
காரணமில்லாத சந்திப்புகள்
யாவுமே
அவள் காரணம் சொல்லாமைக்கு
காரணம் இன்று

Monday, January 11, 2010

Cherie Blair உம் ஆண்களும்




என்னடா தலைப்பு கொஞ்சம் சிக்கலா இருக்கிறதே என்று நினைக்கிறீங்களா ? Cherie Blair உம் பெண்களும் என்று போட்டால் அது ஒரு விசயமே இல்லை என்று கண்டுக்க மாட்டீங்க என்ற பயம் தான்.

இந்த வருடத்தில் (சீ சீ என் வாழ்வில்) மறக்க முடியாத ஒரு நாளாக இன்று மாறியதே எதிர்பார்த்திராதது. எல்லாவற்றுக்கும் காரணம் அம்மணி Cherie Blair தான். மிக அருகில் ஒரு சந்தர்ப்பம், தவற விட மறுக்குமா நெஞ்சம். வாழ்க்கையில் சந்திப்புகள் சகஜமானாலும் சிலருடனான சந்திப்புகள் எப்போதுமே மனதில் நீங்காதவை. அப்படித் தான் இதுவும்.

எவ்வளவு தான் வயது வந்தாலும் இப்பவும் நல்ல இளமையாகவே இருக்கிறார் என்று சொன்னால் நம்புவீங்களா தெரியவில்லை (அவரை முதுமையாக தோற்றும் சில படங்கள் இணையத்தில் இருப்பதால் சொன்னேன்.) அவர் மட்டும் தான் இளமை என்றால் அவர் பேச்சு இருக்கிறதே அது இப்பவுமே சுறுசுறுப்பாகத் தான் இருக்கிறது.

Cherie Blair ஐ அறிமுகப் படுத்தும் போது distinguish என்று சொல்லி அறிமுகப் படுத்தியதால், எதோ மொழிகளில் பேதம் இல்லை என்று பேசுவாரோ என்று நினைத்தேன்; அவர் ஆண்கள் பெண்கள் என்ற பேதம் இல்லை என்று ஆரம்பித்தவர் தான் பெண்களின் முன்னேற்ற வழிகளையும் ஆங்காங்கே தன அனுபவங்களையும் பகிர ஆரம்பித்தார். பெண்களின் நிலைமைகளில் அதிகமாக நாட்டமுடையவர் என்று எனக்கு இப்ப தானே தெரிந்தது (என் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டதே இல்லையா என்று கேட்டால், உண்மையாகவே இது வரை காலமும் Cherie Blair மீது எனக்கு நாட்டம் இல்லை, அதனால் அறிந்து கொள்ள நினைக்கவுமில்லை.

அவரது குடும்பத்திலேயே முதலாவதாக பல்கலைக்கழகம் சென்ற பெண் இவர் தானாம், ஆனாலும் பெண் என்ற வகையில் படித்து முடித்தவுடன், வேலை இல்லாமல் திண்டாடியதாகவும் சொன்னார். வேலை தேடும் வேளையில் எல்லா வேலைத் தலங்களும்
WOMEN ARE NOT SUPPOSSED TO BE HERE என்ற வசனத்தையும்
WHY SHOULD WOMEN BE HERE? என்ற கேள்வியும் மட்டுமே கொண்டிருந்ததாகக் கூறினார் (சத்தியமாக இந்த சொட்பதங்கலையே சொன்னார்; இதே வசனம் இதே கேள்வி - நம்பித் தானாகனும், ஏனென்றால் அது தான் உண்மை....) இறுதியாக வந்த இடம் தான் அவர் கணவரது. இனிய காதல் கதை அது (அதைக் கேட்டு நீங்க மயங்கக் கூடாதே, ஆகையால் அது வேண்டாம்.) கல்யாணத்தின் பின்னர் அங்கே வேலை இல்லை (அது தான் அவர் கணவன் அலுவலகத்தில்). ஆனாலும் இவர் யார் பெண்ணுரிமை என்றே வாழ்பவராச்சே, வேலை செய்யாமளிருப்பாரா?
கடைசியாக ஒரு விடயம் (ஆண்கள் பாவம் அதனால சொல்கிறேன்..)
எப்படித் தான் பெண்ணுரிமைக்காக உழைத்தாலும், அவரின் கொள்கை நியாயமாக இருந்தது, ஏன் என்று கேக்கிறீங்களா? ஒரு வசனம் சொன்னார், என்ன என்று தானே கேக்கிறீங்க.............
இனி வரும் காலத்தில் எல்லா பெண்களும் வேலை செய்ய வேண்டும் ஆண்களுக்குப் பதிலாக அல்ல ஆண்களுக்கு சமனாக (இப்படித்தான சொன்னாங்க என்றீங்களா.......... இந்தக் கருத்துப் பட தான் எதோ ஆங்கிலத்தில் சொன்னாருங்க................)
இன்னும் நிறைய இருக்கு, அப்புறமாக சொல்கிறேனே...
பங்களாதேசத்தில் இன்று ஒரு முக்கிய நிகழ்வு ஆசிய பெண்கள் பல்கலைக்கழகவளாகத்தில் நடைபெற்றது. சிட்டகாங் (Chittagong) நகரத்தின் திறப்பு Cherie Blair க்கு வழங்கப் பட்டது. அதாவது "Key of the city Chittagong" - இந்த நகரத்தில் இவர் எல்லா உரிமைகளும் உடையவராக்கப்பட்டார் (ஏதாவது புரிகிறதா? - குழப்பிவிட்டேன் போல இருக்கிறது, பரவாயில்லை - முடிந்தளவு பின்னூட்டத்தில் விபரிக்கிறேன்.)